கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டு, பயணிகள் ரயில் சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள், 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ராஜ்தானி ரயில்கள் மட்டுமே சில நாட்களாக இயக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் குளிர்சாதன வசதியில்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று இணைய வாயிலாக தொடங்கப்பட்ட நிலையில், இன்று குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மக்கள நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களை மக்கள் தொடர்புகொள்ளலாம். வரும் நாள்களில் அதிகளவு ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் மேலும் பல ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். மக்கள் பயன்பாட்டிற்காக ரயில் நிலையங்களில் உள்ள கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு குறித்து அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் நான்கு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில மாநில அரசுகள் சிறப்பு ரயில் இயக்குவதற்கு மத்திய அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவருகின்றன. சில மாநிலங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்