ஜம்தாரா (ஜார்கண்ட்): ஜார்கண்டின் நாராயண்பூர் பகுதியில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
சில பெண்கள் சுரங்கத்திலிருந்து வெள்ளை மண்ணை பிரித்தெடுக்கும்போது இந்த துயர விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்னர், ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி உடல்கள் மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நிர்வாகத்திற்கு செய்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த மாவட்ட ஆணையர், "பெண்கள் சுரங்கத்தைத் தோண்டும்போது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இர்பான் அன்சாரி நிகழ்விடத்திற்கு விரைந்து நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நமது ஈடிவி பாரத்திடம் தெரிவிக்கையில், பணியாளர்களின் அலட்சியத்தினாலோ, நிர்வாகத்தின் மெத்தனப்போக்காலோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றார். மேலும் அவர், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
சட்டவிரோத மண் பிரிப்பு பற்றி நமது ஈடிவி பாரத் ஏற்கனவே, நிர்வாகத்திடம் கூறியிருந்தது. ஆனால் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.