உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமர்வு இன்று மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடவுள்ளது.
சபரிமலை வழக்கு
அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தத் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
ரஃபேல் வழக்கின் மறுசீராய்வு மனு
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டசால்ட் என்ற பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து 36 போர் விமானங்களை வாங்கியது. ஆனால், ஒப்பந்தத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், உண்மையான விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விமானம் வாங்கப்பட்டதாகக் கூறி மத்திய முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14ஆம் தேதி 2018ஆம் ஆண்டு வழங்கியது. இந்த வழக்கில் தவறான தகவல்களை அளித்து நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது எனக் கூறி யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று வழங்கவுள்ளது.
ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ரஃபேல் வழக்கில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் எனக் கூறியதாக ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையிலும் செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் கூறாத ஒன்றை ராகுல் காந்தி கூறுவதாகவும் இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர், ராகுல் காந்தி தான் கூறியதற்கு நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பையும் ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று வெளியிடவுள்ளது.
இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற அலுவலகம்