ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குழந்தையைக் கொன்றுவிடுவதாகக் கூறி பெண ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 7ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க அகில் பினாரா (35), சனீஃப் அலியா சீபா (28), அப்துல் கானி (29) ஆகிய மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அந்த சமயம் பெண்ணின் கணவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்தார்.
இதையடுத்து வீட்டில் குழந்தை மற்றும் மாமியாருடன் அப்பெண் தனியாக இருந்துள்ளார். இதை கவனித்த அந்த மூவரும் வீட்டின் தரைத்தளத்தில் மாமியார் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, அப்பெண்ணை முதல் தளத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் குழந்தையை கொன்றுவிடுவோம் என மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதில் அகில் பினாரா, சனீஃப் அலியா சீபா அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியபோது, அப்துல் கனிபா வெளியே யாராவது வந்தால் சமிக்ஞை கொடுப்பதற்கு நின்றிருந்தான். இதையடுத்து அப்பெண்ணிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த மூவரும் தப்பியோடி உள்ளனர்.
இது குறித்து மறுநாள் (மே 8) வந்த தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நேற்று (மே 10) அந்த மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 458, 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை), 392(திருட்டு), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை மே 14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.