தினசரி கூலித் தொழிலாளியான அனில்குமார், ஆகஸ்ட் 21 ஆம் தேதி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, அவரின் உடலை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. உடனடியாக, அவர் கரோனா வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
பின்னர், சில நாள்களுக்கு பிறகு கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த அனில்குமார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வீடு திரும்பினார்.
அப்போது, அவரது படுக்கையில் புழுக்கள் நெளிவதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது அவரின் உடலில் ஏற்பட்ட புண்ணில் சுற்றி கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கேரள சுகாதார அமைச்சர் கே கே ஷைலாஜாவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்த அறிக்கையின்படி, பணியிலிருந்த நோடல் அதிகாரி டாக்டர் அருணா மற்றும் சுகாதார செவிலியர்கள் லீனா குஞ்சன் மற்றும் ரஜனி ஆகியோர் நோயாளியை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளது உறுதியானது. இதையடுத்து, மூன்று சுகாதார ஊழியர்களையும் சுகாதார துறை செயலாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தற்போது, அனில்குமாருக்கு பெரூர்கடா அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.