தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கலவரம் நாட்டையே உலுக்கியது. இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், 'டெல்லியில் கலவரம் தொடங்கிய நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயனம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நான் அங்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சம்பவ இடத்திற்கு விரைய முடியவில்லை.
சபை உறுப்பினர்கள் குறைந்தபட்சம் சிந்தனை செய்திருந்தாலே இது புரிந்திருக்கும். எப்போதும் என்னையும், நான் சார்திருக்கும் கட்சியையும் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகிறார்கள். ஆனால் தரவுகள் வேறு விதமான உண்மையை வெளிப்படுத்துகின்றன.
நாட்டின் 76 விழுக்காடு கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் அரங்கேறியுள்ளன. 1989 பாகல்பூர் கலவரம், 1993 மும்பை கலவரம், 1990 போபால் கலவரம், 1992 கான்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் அரங்கேறியுள்ளன. 1980 மொராதாபாத் கலவரம், 1983 அசாம் கலவரம், 1967 ராஞ்சி கலவரம் 1969 அகமதாபாத் கலவரம் ஆகியவற்றின்போது பாஜக ஆட்சியில் இல்லை.
ஆனால் பாஜக அரசின் மீது மட்டும் வேண்டுமென்ற கலவரத்தின் கட்சி என்ற முத்திரையை குத்த முயல்கின்றனர். காங்கிரஸ் அரசு அன்றைய காலத்தில் கலவரத்தை ஒடுக்க எவ்வாறு முயற்சி மேற்கொண்டதோ அதேபோல் தான் பாஜகவும் செயல்படுகின்றது. தேவையில்லாமல் அரசின் மீது வீண்பழி சுமத்துவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளவேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது -அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!