ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள கொங்ரங் நாலா, கோக்ரா ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல்-மே முதல் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஐ.சி) இந்தியா-சீனா இடையே 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
"ஆகஸ்ட் 29-31க்கு இடையில் தெற்கு பாங்காங் ஏரியின் அருகே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியபோது முதல் சம்பவம் (தாக்குதல்) நடந்தது.
இரண்டாவது சம்பவம் செப்டம்பர் 7ஆம் தேதி முக்பாரி உயரத்திற்கு அருகில் நிகழ்ந்தது. செப்டம்பர் 8ஆம் தேதி பங்காங் ஏரியின் வடக்கு கரைக்கு அருகே நடந்த மூன்றாவது சம்பவத்தில், சீன தரப்பு மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் இருதரப்பு படையினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது" என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கலந்துரையாடல்களின்படி, இரு தரப்பினரும் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருந்தனர். ஆனால் தேதி, நேரம் இதுவரை சீன தரப்பினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவும் சீனாவும் ஏப்ரல், மே மாதங்களில் ராணுவ, அரசின் உயர்மட்ட அலுவலர்கள் மட்டத்திலான பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஆனால் இதுவரை எந்த குறிப்பிடத்தக்க முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
சீன ராணுவம் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவாறு, லடாக் பகுதிகளில் இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.