மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் தீர்த்தவாரிக்காக வெளியூர்களிலிருந்து புதுச்சேரிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டுவரப்பட்டன. இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி வழிபட்டனர். அப்போது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயணப் பெருமாள், செஞ்சி ரெங்கநாதர், திண்டிவனம் சீனிவாசப் பெருமாள், மணக்குள விநாயகர், ராமகிருஷ்ணா நகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை, வீதியுலாப் பாதைகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் ஆளில்லா விமானம், 30 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும்வருகிறது. மாசி மகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்று, அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதையும் படிங்க: குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா