விசிக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் திருமாவளவன் பேசியதாகப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதனால், பெரம்பலூரைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயலாளர் கண்ணன் என்பவர் அளித்தப் புகாரின் மீது தமிழ்நாடு காவல்துறை, திருமாவளவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
சம்பவம் நடந்த பகுதி புதுச்சேரி மாநிலம், ஒதியஞ்சாலை காவல் சரகத்துக்கு உட்பட்டது என்பதால், இவ்வழக்குத் தொடர்பான கோப்பு புதுச்சேரி காவல் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கோப்பு தற்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் காவலர்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, புதுச்சேரி ஒதியஞ்சாலை காவலர்கள் விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் பொழிலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் விசிகவினரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து, புதுச்சேரி விசிக-வின் முதன்மைச் செயலர் பொழிலன் கூறுகையில், "எங்கள் கட்சித் தலைவர் மீது வீண்பழி சுமத்தி பொய்யான புகார் கூறி, ஒதியன் சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடத்தினோம்" என்றார்.
இதையும் படிங்க: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்!