தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன் பெற வேண்டும். திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் என பிரதமர் மோடி திருக்குறளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மோடி மட்டுமல்ல திருக்குறளை உலகமெங்கும் உள்ள பல அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதியுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த சௌமியா, திருக்குறளை ஓவியமாக மாற்றி வருகிறார். ஒரு குறளைப் படித்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கிக் கொண்டு, அதனை சர்ரியலிச ஓவியங்களாகத் தீட்டிவருகிறார்.
அதென்ன சர்ரியலிச பாணி ஓவியங்கள்?
கற்பனை மற்றும் உண்மை கலந்த கலைப்பரிமாணம் சர்ரியலிசம். யதார்த்தமாக நடைபெறும் ஒரு விஷயத்தில், நமது சிந்தனைகளை புகுத்தி, ஒரு படைப்பை உருவாக்குவதே சர்ரியலிசம். இதனை உலகப் பொதுமறை திருக்குறளில் புகுத்தி, அதனை ஓவியங்களாகத் தீட்டுகிறார், சௌமியா.
யார் இந்த சௌமியா இயல்?
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஓவியர் சௌமியா. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். தற்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கத்தில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார்.
இவர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே திருக்குறளை ஓவியங்களாக மாற்றத் தொடங்கியுள்ளார். திருக்குறளை மொழி மாற்றம் செய்வது கூட ஓரளவு எளிதெனினும்; அதை ஓவியங்களாக மாற்றுவது அவ்வளவு எளிதல்லவே. இதைப் பற்றி சௌமியாவிடமே கேட்டோம்.
அவர் கூறுகையில், 'வழக்கமாக கதை, கவிதைகளுக்கு ஓவியம் வரைவேன். புனைவு மற்றும் புனைவு அல்லாதவற்றை ஓவியமாக மாற்றுவதில் எனக்கு அலாதி பிரியம். அந்த வகையில் தமிழ் இலக்கியத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும். அதனால் எனக்குத் தெரிந்த மொழியில் (ஓவியம்) திருக்குறளை மாற்றத் தொடங்கினேன். இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதலாக, இது போன்ற ஓவியங்களை வரைந்து சமூக வலைதளங்களில் 'இயல்' என்ற பெயரில் பதிவேற்றி வருகிறேன். இதற்கென தனி ரசிகர் பட்டாளங்களும் உண்டு' என மெல்லியதாகச் சிரிக்கிறார்.
இதுவரை திருக்குறளுக்காக எத்தனை ஓவியங்களை வரைந்திருக்கிறீர்கள்... தினமும் ஒரு ஓவியம் எப்படி சாத்தியப்படுகிறது என வினவினோம். அதற்கு சட்டென சௌமியா, 'எல்லாம் தமிழுக்காக தான் செய்கிறேன்’ என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், 'மக்களுக்கும் இலக்கியத்திற்கும் நடுவில் இருக்கும் இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனைத் தொடங்கி உள்ளேன். இதுவரை, 218 திருக்குறளை ஓவியமாக வரைந்துள்ளேன். இந்தப் பயணத்தை முடிக்க நீண்ட நாள்கள் ஆகும். தற்போது இதற்குத் தயாராகிவிட்டேன். இது மிகவும் சுவாரஸ்யமாக மட்டுமில்லாமல், எனது அன்றாட வாழ்விலும் ஒன்றாகிவிட்டது.
சில குறள்களை உள்வாங்கி அதற்கேற்றார் போல வரைவதற்கும் வெகுநேரமாகும். சில நேரங்களில் காலையில் தொடங்கி மாலை வரை நேரம் சென்றது கூட தெரியாமல் வரைந்திருக்கிறேன்' என்கிறார்.
சௌமியாவின் ஓவியமும் அதன் விளக்கமும்:-
கீழ்கண்ட இந்த ஓவியம் திருக்குறளில் அறத்துப்பால் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 188ஆவது குறள்.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு - குறள் 188 | பால் -அறத்துப்பால்
நெருங்கிப் பழகியவர்களின் குற்றத்தையும் அவர்கள் அவ்விடத்தில் இல்லாதபோது புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர்கள், பழகாத அயலாரிடத்தில் என்னென்ன செய்வார்களோ? என்பதே இக்குறளின் பொருளாகும்.
இதிலிருக்கும் சவால்கள்?
'என்னுடைய பணிகளையும் சேர்ந்து முடித்துவிட்டு செய்வது தான் சவால். வீட்டிலிருக்கும் அன்றாட வேலைகளைச் செய்துவிட்டு செய்ய வேண்டும். கரோனா ஊரடங்கால் ஓரளவிற்கு நேரத்தைப் பழக்கிவிட்டேன். இனி சிறப்பு விரிவுரையாளராக கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டு கூட வரைய முடியும் எனத் தோன்றுகிறது. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி 1330 குறள்களையும் ஓவியமாக வரைந்து முடித்துவிடுவேன்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், செளமியா.
சௌமியாவின் ஓவியங்கள் திருக்குறளை நேசிக்காதவரைக் கூட, ஒரு நிமிடம் நின்று கவனிக்க வைத்துவிடும். அதுவே, இவரின் சர்ரியலிச பாணி திருக்குறள் ஓவியங்களுக்குக் கிடைத்த வெற்றி.
எதிர்காலத்தில் சௌமியா, 'இயல்' என்ற புனைப்பெயரில் தான் வரையும் 1,330 திருக்குறள்களையும் ஓவியக் கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளார். திருக்குறளை தூரிகை வழி, பறைசாற்றும் சௌமியாவிற்கு வாழ்த்துகள்.
இதையும் படிங்க: ஓய்வு நேரங்களில் ஓவியம் வரையும் வருவாய் ஆய்வாளர்!