டெல்லி: கரோனா வைரஸின் மூன்றாவது அலை தலைநகர் டெல்லியில் தென்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ டெல்லியில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகரித்துவருகின்றனர். இதனை மூன்றாம் அலை என்றும் அழைக்கலாம். செப்டம்பர்- அக்டோபர் வரையிலான காலக்கட்டங்களில் டெல்லியில் கரோனா பாதிப்புகள் குறைய தொடங்கின.
மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகளும், மருந்துப் பொருள்களுக்கும் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. விவசாய கழிவுகளை உரமாக்குவது குறித்து ஆய்வுகள் நடத்திவருகிறோம். முதல்கட்டமாக விவசாய கழிவுப் பொருள்களை வயலிலேயே மட்க செய்து உரமாக்கும் இரசாயனம் தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
டெல்லியில், விவசாய கழிவுப் பொருள்கள் விவகாரத்திலும் தீர்வுகள் காணப்பட்டுவருகின்றன. விவசாயிகள் எக்காரணம் கொண்டும் விவசாய கழிவுப் பொருள்களை வயல் வெளிகளில் எரிக்க வேண்டாம். நாங்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். டெல்லியில் தீபாவளி பட்டாசுகளின் பயன்பாடு, விற்பனை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது, எனவே இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு, குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரம்; நரேந்திர மோடி, நிதிஷ் மீது ராகுல் தாக்கு!