புதுச்சேரி அரசுப்பள்ளிக் கல்வி இயக்ககம், சமகர சிக்ஷா மனிதவள மேம்பாட்டு கழகத்தின் உதவியுடன் ’வானவில் 2020’ நிகழ்ச்சி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரங்கோலி, பட்டம் செய்தல், கைவினைப் பொருள்கள் செய்தல், தற்காப்புக் கலைகள், சிலம்பாட்டம், இசைக்குழு அணிவகுப்பு, பாரம்பரிய உடை அணிவகுப்பு, பொம்மலாட்டம், இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம் முதலிய போட்டிகள் நடைபெற்றன.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திருவிழா, மழலைப் பாடல்கள், கதை சொல்லுதல், மெல்லிசை, இசைக்கருவி மீட்டல், தனி நடனம், ஆசிரியர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் கல்வித் தொடர்பான ஸ்டால்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு ரங்கோலி, பட்டம் தயாரித்தல் ஆகிய போட்டிகளைத் தொடங்கிவைத்தார். பின்னர், மாணவர்கள் தயாரித்த பட்டங்களை மாணவர்களுடன் இணைந்து வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தார். இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலை காந்தி திடலில் நடைபெறவுள்ளது. இதில் நாராயணசாமி கலந்துகொண்டு பரிசுகளை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக உடன் கூட்டணி வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு