அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்தவர் பனுல்லா அகமது. இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது அறை நண்பரான தபாஷ் பகவதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். தபாஷ் பகவதி தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளும் செய்து வருகிறார்.
இந்நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு அவசரமாக 2யூனிட் ஓ பாசிட்டிவ் பிரிவு ரத்தம் தேவை என தபாஷுக்கு தகவல் வந்துள்ளது. பல இடங்களில் தபாஷ் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்கவில்லை. இதனை தனது அறை தோழனான பானுல்லா அகமதுவிடம் சொல்ல, அவரே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால் பானுல்லா அகமது ரமலான் நோன்பில் இருப்பதால், உணவு ஏதும் உட்கொள்ளாமல் ரத்தம் கொடுத்தால் சரிவராது என தபாஷ் அதனை ஏற்கவில்லை. ஆனால் நிலைமையை உணர்ந்த பானுல்லா அகமது பிடிவாதமாக மருத்துவமனைக்குச் சென்று ஒரு யூனிட் ரத்தத்தை நோயாளிக்கு கொடுத்துள்ளார்.
இது குறித்து தபாஷ் பகவதி கூறுகையில், பானூல்லா ரத்தம் கொடுப்பதாக கூறியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் நோன்பில் இருப்பதால், அதற்கு தடையாக இருக்க கூடாது என நினைத்தேன். ஆனால் அவன் பிடிவாதமாக ரத்தம் கொடுத்துவிட்டான் என்றார். நோன்பை பாதியில் கைவிட்டு ரத்த தானம் கொடுத்த பானுல்லா அகமதுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.