தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற மருத்துவமனை நிம்ஸ். 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு சமீபமாக வயிற்று வலி அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அச்சமடைந்த பெண் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து எக்ஸ்-ரே (X-Ray) எடுத்துபார்த்தார்.
அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்திரிக்கோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் கத்திரிக்கோலை கவனக்குறைவால் வயிற்று பகுதியிலேயே வைத்துவிட்டனர் என்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், உடனடியாக அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோல் அகற்றப்படும் என மருத்துவமனை இயக்குநர் மனோகர் கூறியுள்ளார்.