புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதி முதலமைச்சர் நாராயணசாமி தொகுதியாகும். இதனிடையே, அத்தொகுதியில் தொடர்ந்து பெய்துவந்த கனமழையினால் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.
இந்தச் சாலை விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும், திருடர்களுக்கு பாதுகாப்பான பகுதியாகவும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்பகுதியில் சில மாதங்களாக மின் விளக்கு எரியவில்லை என்ற புகாரும் இருக்கிறது. இவற்றை கண்டித்து கம்யூனிஸ்ட் ஏ.ஐ.ஒய்.எஃப். பிரிவின் நெல்லித்தோப்பு கிளை சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அப்பதாகையில் பொறிக்கப்பட்ட வாசகங்கள்:
- விவசாயத்திற்கு தயாராகும் சாலைகள்
- திருடர்களுக்கு பயன்படும் மின்வெட்டு மற்றும் தெருவிளக்கு
- பொதுமக்களுக்கு பயன்படாத சமுதாய நலக்கூடம்
- மஞ்சள் காமாலை வந்த குடிநீர்
நெல்லித்தோப்பு தொகுதி சமிக்ஞை (சிக்னல்) அருகே வைக்கப்பட்டுள்ள இந்தப் பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் நாராயணசாமி தொகுதி மிகவும் ஆபத்தான பகுதி எனப் பதாகை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ’மாநில அரசுகள் மத்திய அரசுக்கு முனிசிபாலிட்டி’ - வைகோ