புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அது குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது. அதில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் இன்று (நவம்பர் 10) துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தினர்.
அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், புதுச்சேரியில் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் பயில 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு பெற்றுத் தர முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும், அதற்காக துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீடு விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தடுப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுவது தவறு என்ற பாஜக உறுப்பினர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு பெற்றுத்தர ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினர்.