ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் கரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி முதல் நாடு முழுவதுமுள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து 80 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோயிலும் திங்கள்கிழமை முதல் சாமி தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. முதல் மூன்று நாள்களுக்கு, திருப்பதி தேவஸ்தான ஊழியர்களும், உள்ளூர் மக்களும் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, திருப்பதியில் இருக்கும் கோவிந்தராஜ சாமி கோயிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கோயிலின் நடை மூடப்பட்டது. இதையடுத்து, அந்த ஊழியர் சென்று வந்த இடங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்றும் (ஜூன் 12), நாளையும் கோயில் மூடப்படும்.
அத்துடன், கரோனா பாதித்த தேவஸ்தான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஆந்திர சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கோயிலை மீண்டும் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி யாருடைய கரம்பற்றி நடப்பாள் அந்த ஏழு வயது குழந்தை