உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் முதல் உள்நாட்டு கரோனா வைரஸ் தடுப்பூசியை, ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசிக்கு “கோவேக்ஸின்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியின் முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இரண்டாம் கட்ட சோதனைக்கு உள்வாங்கப்படவுள்ள அந்த தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுத்துவரும் பணிகள் மற்றும் பாதிப்பு நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 9) விவாதிக்கப்பட்டது.
அப்போது ஏ.ஐ.எம்.ஐ.ஏம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அக்பருதீன் ஓவைசி, "பாரத் பயோடெக்கின் தடுப்பூசி மீதான இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அறிய முடிகிறது. தலைநகர் ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தெலங்கானாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
நமது மாநிலத்தில் தயாரிக்கப்படும் இந்த மருந்து தெலங்கானா மக்கள் அனைவருக்கும் சென்றடைவதை அரசு உறுதி செய்திட வேண்டும். மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கோவேக்ஸினின் விநியோகத்தில் நமது பங்கை உறுதிசெய்ய வேண்டும்" என கோரினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், "பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசிப் பகிர்வில் தெலங்கானாவுக்கு முன்னுரிமை உறுதிசெய்யப்படும். மாநில அரசு அந்நிறுவனத்துடனும் மத்திய அரசுடனும் பேசிவருகிறது. தெலுங்கானாவுக்கு முன்னுரிமை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை, நாங்கள் இதை உறுதி செய்வோம்"என்று உறுதிப்பட கூறினார்.