இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, "மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே நாளில் புதிதாக 169 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 64 பேரும், வெளி மாநிலத்திலிருந்து தெலங்கானா வந்த குடிபெயர் தொழிலாளர்கள் ஐந்து பேரும் அடங்குவர்.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,425ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் மாநிலத்தில் 434 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 207 பேர் வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் ஆவர்.
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேர் நேற்று (மே 29) வீடு திரும்பியுள்ளனர். இதனால், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1381ஆக அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாநிலம் முழுவதும் 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பு மருந்தாலும் கரோனவை அழிக்க முடியாது - அதிர்ச்சித் தகவல்