தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், கட்சியின் தலைமையகமான தெலங்கானா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் 20வது நிறுவன தினத்திற்கு தலைமை தாங்கினார். ஐந்து நிமிடங்களில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூக்கிய தலைவர்கள் சிலர் மட்டும் கலந்துக்கொண்டனர். வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முகக் கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியையும் கடைபிடித்தும் விழா நடைபெற்றது.
முன்னதாக, டிஆர்எஸ் கட்சியின் தலைவர், மாநில மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி கடந்த 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி சந்திரசேகர் ராவ், டி.ஆர்.எஸ் கட்சியை நிறுவினார்.
கட்சியின் சாதனைகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர், கட்சி தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமான, தெலங்கானா தனி மாநிலம் பெற்றதோடு நின்றுவிடாமல், மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாகவும் கூறினார். மின்சாரம், குடிநீர், நீர்ப்பாசனம், விவசாயம், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் டிஆர்எஸ் அரசு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டிஆர்எஸ் கட்சி தலைமையிலான மாநில அரசு, மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்த்ததோடு, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை கருத்தில்கொண்டு மிக சிலரை மட்டுமே விழாவில் பங்கேற்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறிய அவர், தெலங்கானா உருவாக காரணமாக இருந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பரிந்துரைத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கட்சிக் கொடியை ஏற்றவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் பார்க்க: 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கருவிக்கு, அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன்? - ஸ்டாலின் கேள்வி