தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் சிவம்பேட்டா பகுதியைச் சேர்ந்த தசரி நரசிம்ஹுலு, தனது விவசாய நிலத்தில் உள்ள போர்வெல்லை பழுதுபார்ப்பதற்காக மல்லையா என்பவருக்கு ரூ.700 கொடுக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால்,வேலை முடிந்தபின் தசரி அவருக்கு ரூ.500 மட்டுமே கொடுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நிலுவையில் உள்ள தொகையை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மல்லையா ஆதரவாளர்கள் தசரியை தாக்கியதாகத் தெரிகிறது. இது குறித்து தசரி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், மல்லையா உள்பட இரண்டு பேர் கிராமத்தின் பெரியவர்களிடம் 200 ரூபாய் தராமல் தசரி ஏமாற்றிவருவது குறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தசரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நினைத்த ஊர் பெரியோர்கள், தசரி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கிராமத்திலிருந்து ஒதுக்கிவைக்கிறோம். அவர்களுடன் யாராவது உரையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் மற்றும் 5 செருப்பு அடி வழங்கப்படும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். வெறும் 200 ரூபாய்க்கா ஒரு குடும்பமே ஒதுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.