கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் ஒரு நாள் சிகிச்சைக்கு 1.15 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு செல்லும்படி தும்பே எனும் தனியார் மருத்துவமனை சிறைப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிகிச்சைப் பெற்ற மருத்துவர் சுல்தானா தெரிவிக்கையில், “16 நாட்களாக கோவிட்-19 தொற்றினால், என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். இச்சூழலில் ஜூலை ஒன்றாம் தேதி எனக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் தும்பே எனும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன்.
முதலில் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தும்படி கூறினர். இதனையடுத்து ஜூலை இரண்டாம் தேதி என் உடல் நிலை தேறிய நிலையில், வீடு திரும்புவதற்காக தலைமை மருத்துவர்களிடம் ஆலோசித்தேன்.
அப்போது ஒரு நாள் மருத்துவ செலவாக 1.15 லட்சம் ரூபாய் பணத்திற்கான ரசீதை என்னிடம் அளித்தனர். இதனையடுத்து அதிர்ந்து போன நான் அது குறித்து விளக்கம் கேட்டேன். ஆனால், பணத்தை செலுத்தினால் தான் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க முடியும் என என்னை சிறைப் பிடித்தனர். இதனை அடுத்து வேறு வழியில்லாமல் பணத்தை செலுத்தி விட்டு வீடு திரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த சாடெர்கட் காவல் ஆய்வாளர் சதீஷ், மருத்துவரை சிறை பிடித்தற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், மருத்துவமனை கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு இவரை சிறைப் பிடிக்கவில்லை என்றும் தெரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.