தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தின் நண்டுல்லாபள்ளி கிராமத்தில் சரத் என்ற விவசாயி வசித்து வருகிறார். அந்த கிராமத்தின் கிராம வருவாய் அலுவலர், நிலம் தொடர்பான ஆவணங்களில் மாற்றம் செய்து ஏழு ஏக்கர் விவசாய நிலத்தை பிறருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த விவசாயி தனது நிலத்தை மீட்பதற்காக கடந்த பதினோரு மாதங்களாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் தனது பிரச்னையை சமூகவலைதளமான முகநூல் பக்கத்தில் பதிவிட்டால், அது நேரடியாக முதலமைச்சரின் பார்வைக்கு சென்று விடும் என்று எண்ணியுள்ளார். பின்னர் தனது நிலப்பிரச்னை தொடர்பாக முகநூலில் நேரலையாக பதிவிட்ட செய்தி தெலங்கானா முழுவதும் வைரலானது.
இதையடுத்து, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அந்த விவசாயியை நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். மேலும், அரைமணி நேரத்தில் உரிய அதிகாரிகள் வந்து பிரச்னையை தீர்த்து வைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதைப்போன்று, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் மஞ்செரியல் மாவட்ட ஆட்சியரே நேரடியாக அந்த விவசாயியின் கிராமத்திற்கு சென்றுள்ளார். மேலும், ஆவணங்களில் மாற்றம் செய்த கிராம வருவாய் அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர் அந்த விவசாயியின் விபரங்களை வாங்கிய ஆட்சியர் அவரின் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக ரித்துபந்து திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட அந்த விவசாயிக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.