தெலங்கானா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். பின்னர், நீண்டகாலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 10 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக இன்று தமிழிசை செளந்தரராஜன் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், புனித தசமி நாளான இன்று, மாநில அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். அதன்படி, தற்போது தெலங்கானா அமைச்சரவையில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்பட 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், கே.டி. ராமா ராவ், ஹரிஷ் ராவ், சத்யாவதி ரத்தோட், சபிதால இந்திரா ரெட்டி, பூவ்வாடா அஜய் குமார், கங்குலா கமலகர் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.