நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்ததும் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான, பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற கட்டடம் போதுமான அளவில் உள்ளதாகவும் கரோனா காரணமாக தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது புதிய கட்டடம் கட்டுவது தேவையற்ற ஒரு செலவு என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடத்தை கட்ட தொடர்ந்து ஆர்வம் கட்டியது. இதற்கான ஏலமும் சமீபத்தில் கோரப்பட்டது. மத்திய அரசின் பொதுப்பணித் துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது.
இந்த ஏலத்தில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டன. குறிப்பாக எல் & டி நிறுவனம் தனது டெண்டர் கேட்பு மனுவில் ரூ. 865 கோடி என குறிப்பிட்டிருந்தது. ஆனால், டாடா நிறுவனம் அதைவிட ரூ. 3.1 கோடி குறைவாக ரூ.861.90 கோடியை தனது டெண்டர் கேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனால் வெறும் ரூ. 3.1 கோடி ரூபாயில் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்தை கட்டுவதற்கான ஏலத்தை எல் & டி நிறுவனத்திடமிருந்து டாடா தட்டிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: பொறுமையிழந்த மாநிலங்களவைத் தலைவர்!