பஞ்சதந்திரம் திரைப்படத்தில் வரும் "பெரிய கல்லு... சின்ன லாபம்" என்ற வசனத்திற்கு ஏற்ப மிகவும் அதிகப்படியான செலவுகளை உள்ளடக்கிய ஒரு துறையாக விமானத்துறை இருக்கிறது.
விமானத்திற்கான செலவு, பராமரிப்புச் செலவு, விமானத்தை தரையிறங்க கட்ட வேண்டிய தொகை, ஊழியர்களுக்கான ஊதியம் என்று பல்வேறு செலவுகளை உள்ளடக்கிய இந்தத் துறையில் லாபத்தை காண்பது என்பது சவாலான ஒன்று. இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வரை விமானத்துறையில் நஷ்டம் அடைந்தவர்களின் லிஸ்ட் எடுத்தால் அது நீண்டுகொண்டே இருக்கும்.
ஏர் இந்தியா
இந்தச் சூழ்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கிவரும் இந்தியாவின் மகாராஜா என்று அழைக்கப்படும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதும், மத்திய அரசு அதன் முடிவில் உறுதியாக உள்ளது.
இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு, இறுதித் தேதியை ஏற்கனவே இரண்டு முறை நீட்டித்திருந்தது. அதன்படி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்பதற்கான இறுதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டும் டாடா குழுமம்
இந்நிலையில் ரத்தன் டாடா வுக்கு சொந்தமான டாடா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்க முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக, எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவை ஏலம் கேட்க முன்வராதபோது, டாடா ஏர்லைன்ஸ் தற்போது எடுத்துள்ள முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
டாடா ஏர்லைன்ஸ் தற்போது இந்திய விமானத் துறையில் நேரடியாக இயங்கவில்லை என்றாலும் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ஏர் விஸ்தாராவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து டாடா ஏர்லைன்ஸ் நடத்தி வருகிறது. ஏர் விஸ்தாராவில் டாட்டா நிறுவனத்தின் பங்குகள் 51 விழுக்காடு உள்ளது.
தற்போது கோவிட் 19 தொற்று காரணமாக விமானத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்க டாடா நிறுவனத்துடன் இணைய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
திரும்பும் வரலாறு
ஏர் இந்தியா நிறுவனம் 1932ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடாவால் டாடா ஏர்லைனஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட தொடங்கியது.
அதைத்தொடர்ந்து 1953ஆம் ஆண்டு, நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏர் இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை வாங்கி, அதை அரசு நிறுவனமாக மாற்றியது. இந்நிலையில், சுமார் 57 ஆண்டுகளுக்கு பின், தற்போது இந்தியாவின் மகாராஜா மீண்டும் டாடா குழுமத்திற்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யெஸ் வங்கியில் எஸ்பிஐ முதலீடு!