கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் கரோனா தொற்றுநோய் பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உடல் நிலை மோசமாகி அவர் இன்று (ஆகஸ்ட் 27) காலமானார்.
அவரது மரணத்திற்கு வசந்தகுமாரின் அண்ணன் குமரி ஆனந்தனின் மகளும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக கருத்திட்டுள்ளார். அதில், "நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்.
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர ரத்த பாசம் இருவரிடமும் உண்டு. தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன். சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம் கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது.
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது. ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.