ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, பைலட் வசம் இருந்த துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அக்கட்சி மேலிடம் பறித்தது.
அதன்பின், ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க முயன்றதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர் பன்வர்லால் சர்மா இருவரும் பேசிய ஆடியோ வெளியாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக கோவிந்த் சிங் டோடாஸ்ரா நேற்று (ஜூலை 18) நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான "லகான்" திரைப்படத்தை ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் கோவிந்த் சிங் டோடாஸ்ரா மற்றும் முதலமைச்சர் ஆதரவு எம்எல்ஏக்கள் கண்டு களித்தனர்.
அதன்பின் பேசிய கோவிந்த் சிங், "பாரதிய பழங்குடியினர் கட்சியைச் சேர்ந்த (Bharatiya Tribal Party) எம்எல்ஏக்கள் அனைவரும் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அரசு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களிலும் பிடிபி எம்எல்ஏக்கள் திருப்தி அடைந்துள்ளனர். ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு மத்தியில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிடிபி கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது" என்றார்.