ரோட்டக் : பிகாரிலிருந்து ஹரியானாவுக்கு வேலை தேடிச்சென்ற குடிபெயர் தொழிலாளர்கள் பிகார் மாநில அரசியல் கட்சிகளுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி, தங்களை தங்களது வீடுகளுக்கு யார் அழைத்துச் செல்கிறார்களோ அந்தத் தலைவருக்கு தங்களது வாக்கு செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர்.
வரவிருக்கும் தங்கள் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஹரியானாவில் இருக்கும் பிகாரைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல நினைத்தாலும், அவர்களிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரோனா பெருந்தொற்றால் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணி தேடுவதும், பணிக்கு செல்வதுமே கடினமான ஒன்றாக உள்ளது. இது குடிபெயர்ந்த தொழிலாளிகளுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது பயணத்திற்கான செலவை ஏற்கும் கட்சிகளுக்கே தாங்கள் வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிகாரிலிருந்து சென்ற குடிபெயர்ந்த தொழிலாளி முகமது குஷ்பூர் கூறுகையில், "நாங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்த பணத்தில்தான் தற்போது வாழ்க்கை நடத்தி வருகிறோம். யார் எங்களை எங்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்களோ, அவர்களுக்கே நாங்கள் உறுதியாக வாக்களிப்போம்" என்றார்.
ரோட்டக்கில் இருக்கும் பிகாரைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான முகமது நிஜாம், "நாங்கள் உதவியற்றவர்களாக இருந்தோம், வேலை தேடி இங்கு வர வேண்டியிருந்தது. இப்போது நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பிகார் செல்ல பயணத்திற்கு எந்தத் தலைவர் நிதியுதவி செய்யத் தயாராக இருக்கிறாரோ, நிச்சயமாக அவருக்கே வாக்களிப்போம்" என உறுதிபடக் கூறினார்.
தர்பங்காவிலிருந்து ரோட்டாக்கிற்கு வந்த மற்றொரு தொழிலாளி சுனில் குமார் பேசுகையில், ”கோவிட் பொது முடக்கம் தொழிலாளர்களின் துயரங்களை மேலும் அதிகரித்துள்ளது. வீடு திரும்ப நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், ஊரடங்கால் இங்கேயே சிக்கிக்கொண்டோம்.
எங்களுக்கு வேலை இருந்தால்தான் நாங்கள் பிழைப்பு நடத்த முடியும். வேலையில்லாத நாள்களில் பசியுடனே தூங்கச் செல்வோம். இது தேர்தல் நேரம், எந்தக் கட்சி எங்களை எங்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறதோ அக்கட்சிக்கே எங்களின் வாக்கு” எனத் தெரிவித்தார்.