இந்திய வங்கிகளில் ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று லண்டனுக்கு தப்பியோடிய மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பொறுப்புகளை பாரத ஸ்டேட் வங்கி கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மல்லையா, "பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்களை காப்பாற்றியுள்ளது. அதே சமயம், பொதுத் துறை வங்கிகள் இந்தியாவின் தலைசிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தை காப்பாற்ற தவறிவிட்டது. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை நிலைபாட்டைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சமர்பித்த தனது சொத்துக்களை பொதுத்துறை வங்கிகள் ஏன் எடுத்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் காப்பாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.