உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கிய மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மத வழிபாடுகளுக்கும் நெறிமுறைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸ் பகுதியில் தப்லீக் ஜமாஅத்தின் மாநாடு நடைபெற்றது.
இதனையடுத்து, ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்தன. தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற 34 நாடுகளைச் சேர்ந்தவர்களால் நூற்றுக்கணக்கானவர்களுக்குக் கரோனா பரவியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தப்லீக் ஜமா அத் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரில் பலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி, இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதனால்தான் கரோனா தொற்று இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் பரவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பயணக்கட்டுபாடுகளை மீறி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு இந்தியா வந்தனர் என பரவலாக கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களில் பலர் விசா நடைமுறைகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறி கைது செய்து டெல்லி சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
மாநாட்டை ஏற்பாடு செய்த தப்லீக் ஜமாஅத் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் குர்மோகினா கவுர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று வந்தது. அதன்போது, சிறையிலடைக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்குரைஞர்கள் ஆஷிமா மண்ட்லா, மண்டகினி சிங், பாஹிம் கான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதால் குறைந்தப்பட்ச தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிட் -19 பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளை புறக்கணித்து, விசா விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 92 இந்தோனேசியர்களின் வெளிநாட்டினரின் சமூக-பொருளாதார நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு தலா ரூ .10,000 தனிப்பட்ட பத்திரத்தை ஒப்படைத்து பிணையைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த 13ஆம் தேதியன்று கிர்கிஸ்தானைச் சேர்ந்த 85 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.