கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்விக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக, நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு வந்த பலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிகளை மீறி, மாநாடு நடத்திய காரணத்தால் அந்த அமைப்பின் தலைவர் மவுலானா சாத் உட்பட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில் பங்கேற்கக்கோரி, அவருக்கு பலமுறை அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை எனப் புகார் எழுந்தது.
இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் புசைல் அய்யூபி கூறுகையில், 'காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்துவருகிறோம். மவுலானா ஒன்றும் மறைந்து ஓடிவிடவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது காவல் துறையினருக்குத் தெரியும்’ என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 56 பேர் உயிரிழப்பு