கர்நாடகா சட்டப்பேரவைக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், 80 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், 37 தொகுதிகளை கைப்பற்றிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, கூட்டணியில் குழப்பம் நிலவியது. இந்தக் கூட்டணியைச் சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் சர்ச்சைக்குரிய அந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
17 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் எனவும், ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் நாளை பாஜகவில் இணையவுள்ளனர் என தெரிவித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகளின் அழுகுரலைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?