வாஜ்பாய் அமைச்சரவையில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அரசியலில், தன் திறமையால் பல உயரங்களை தொட்டு, அனைத்து கட்சியினரிடமும் நன்மதிப்பைப் பெற்ற சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்திலிருந்து தனது பொது வாழ்க்கையை தொடங்கிய சுஷ்மா ஸ்வராஜ், அதற்கு நேரெதிர் கொள்கைகளை உடைய சோசலிச தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 'பரோடா டைனமைட்' வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 25 வயதில் ஹரியானா அமைச்சரவையில் இடம்பெற்ற சுஷ்மா ஸ்வராஜின் திறமையைக் கண்டு பாஜக தலைவர்கள் வியந்தனர்.
பெரும் தலைவர்களை எதிர்த்த சுஷ்மா!
வெற்றிபெற முடியாது என தெரிந்த போதிலும், டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டு மறைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக களம் கண்டவர் சுஷ்மா ஸ்வராஜ்.
வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து பெல்லாரி தொகுதியில் தோல்வி கண்டார்.
சோனியா காந்தியுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்த சுஷ்மா ஸ்வராஜ், சோனியா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் மொட்டை அடித்துக் கொள்வேன் எனவும் வெள்ளைப் புடவை அணிந்து கொள்வேன் எனவும் சூளுரைத்தார். ஆனால், அதற்கு பிறகு சோனியா காந்தியுடன் நல்ல உறவையே சுஷ்மா தொடர்ந்தார்.
அமைச்சரவைக்கே பெருமை சேர்த்த அமைச்சர்!
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக சுஷ்மா இருந்தபோது, பாலிவுட் சினிமாவை உலக தரத்தில் உயர்த்தும் வகையில் புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் சினிமா இரவு என விழா நடத்தினார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, ஆறு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது சுஷ்மா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல உதவிகளை செய்தார். சவுதி அரேபியா, அதன் நட்பு நாடுகள் யேமனில் போர் தொடுத்தபோது, ஆபரேஷன் ரஹத் என்ற பெயரில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். முக்கியமாக சமூக வலைதளத்தை ஒரு அமைச்சர் எப்படி பயனுள்ளதாக பயன்படுத்த முடியுமோ அப்படி சிறப்பாக பயன்படுத்தினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவிய 'தாமரை மகள்'
ஜார்ஜியாவில் தன் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு திரும்பி அழைத்துவரும்படி காயத்ரி விஜயகுமார் என்பவர் சுஷ்மா ஸ்வராஜிடம் ட்விட்டரில் கோரிக்கைவிடுத்தார்.
இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவரும் அளவுக்கு சகோதரரின் உடல்நிலை இல்லை, அவரின் விசா காலாவதி ஆகியுள்ளது, அவரின் விசாவுக்கு கால நீட்டிப்பு வழங்க இந்திய தூதரகத்திடமிருந்து கேட்டுக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் சுஷ்மா பதிலளித்தார்.
இப்படி பலமுறை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவி செய்து, ட்விட்டரை மக்கள் சேவைக்காக மாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ்.
மத மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலர் ஒருவர் அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்ப்பை மீறி அவருக்கு எதிராக சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுத்து மனிதநேயம் காத்தவர் என அவரை பலர் பாராட்டினர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுஷ்மா அறிவித்த நிலையிலும், மோடி பிரதமராக பதவியேற்றபோது அந்த விழாவுக்கு வந்து அனைவரிடமும் புன்னகையுடன் பேசியவர் சுஷ்மா ஸ்வராஜ். அவர் மறைந்தாலும், அவரின் புன்னகையை யாரும் மறக்கப்போவதில்லை.