கர்நாடக மாநிலம் பெல்லாரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது பிரதிக் பரஸ்ரம்பூரியா (Prathik Parasrampuria) என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாருக்கு எதிராக பிரதிக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி புகாரை நிராகரித்தது. இதுதொடர்பாக கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா, ஷாண்டனகௌடர் (Shantanagoudar) விசாரித்தனர். அப்போது, 2014 மக்களவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் விவரங்கள், அது தொடர்பாக பதிவான வழக்குகள் பற்றிய தகவலை அறிக்கையாக சமர்பிக்குமாறு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், கடந்த மக்களவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் விவரங்கள், இது தொடர்பாக பதிவான வழக்குகள் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லை என, தெரிவித்தது. இதனால், இது பற்றிய தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.