குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஊரடங்கிற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் மேலும் ஐந்து மனுக்கள் தொடரப்பட்டன.
தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் முக்கிய வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்த இந்த மனுக்கள் முதல்முறையாக விசாரணைக்கு வந்தன. இதில், ஏற்கனவே தொடரப்பட்ட 160 மனுக்களுடன் இந்த மனுக்களையும் இணைத்து உத்தரவிடப்பட்டு, மத்திய அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டு தற்போது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில், அஸ்ஸாம் மனுதாரர் ஒருவர், தனது மனு பிற மனுக்களிலிருந்து வேறுபட்டு அஸ்ஸாம் உடன்படிக்கைகள் அடிப்படையில் உள்ளதால் தனது மனுவை தனித்து விசாரிக்கக் கோரியிருந்த நிலையில், நீதிபதி பாப்டே இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் குடியுரிமை பெறும் காலம் 12 ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இன்னல்களுக்கு ஆளான, இந்து, சமணம், சீக்கியம், கிறிஸ்தவம், பார்சி, பௌத்தம் ஆகிய மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு புகலிடம் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இச்சட்டத்தில் இஸ்லாமிய சமூகம் மட்டும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் இது தொடர்பாக 150க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க : கட்சி மாறிய சிந்தியா, காயின் வெளியிட்டு மரியாதை செலுத்திய பாஜக