இம்மாத தொடக்கத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இது சட்டமாக வடிவம் பெற்றது. இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை பெறலாம். இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த வாரம் ஜாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவ மாணவியர் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்போது இந்த மனு மீது விசாரணை நடத்த மறுத்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் உயர் நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தியது. மேலும் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, "இந்த மனுவை மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே சரியான ஒன்றாக இருக்கும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்குவதிலும் அவர்களின் கைது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவும் சுதந்திரம் அளிக்கப்படும். மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்"என்றார்.
இந்த வழக்கில் உள்ள சாராம்சங்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டறிந்து உண்மை அறியும் குழுக்களையும் நியமிக்கலாம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.