பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகம் ஒன்றில், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ’டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சைன்ஸ்’ பல்கலைக்கழகம், அந்த காப்பகத்தில் ஆய்வை மேற்கொண்டது. அப்போது, காப்பகத்தில் உள்ள 44 சிறுமிகளில் 34 பேர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர், காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் பீகார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா, வழக்கின் விசாரணையை டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிதியுதவி, மருத்துவ வசதி ஆகியவை மாநில அரசு உடனடியாக செய்து தர வேண்டும் எனவும், எட்டு சிறுமிகளை அவர்களின் குடும்பத்திடம் சேர்த்து வைக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.