நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதனையடுத்து பலகட்ட செயல்முறைகளுக்குப் பின் இறுதியாக விண்கலத்தில் உள்ள ’விக்ரம்’ லேண்டர் நாளை அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்தது.
இத்திட்டம் வெற்றிபெறும் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் 2 வெற்றிபெற மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். ஒடிசாவை சேர்ந்தவரான இவர், புரி கடற்கரையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவை சுற்றி வருவதை போல மணலில் ஓவியம் வரைந்துள்ளார்.
அதில், சந்திரயான் 2 வெற்றிபெறும் போன்ற வாசகங்களையும் எழுதியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் வரைந்த மணல் சிற்பத்தின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.