நீட் தேர்வில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு அவர்களுக்கு பயிற்சி அளித்தது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 19,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு பள்ளியில் படித்த மூன்று மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து நான்கு பேரும் 2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இடங்கள் கிடைத்தது. இந்த முறை மாணவர்களின் மதிப்பெண் உயர்ந்தாலும்கூட, தமிழ்நாடு அரசு பயிற்சி முகாமில் படித்த 19,355 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை.
நீட் போன்ற தேர்வுக்கு 1,200 மணி நேர பயிற்சி அவசியமானது, ஆனால் தமிழ்நாடு அரசு பயிற்சி முகாமில் 500 மணி நேர பயிற்சிதான் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு படிப்பதற்கு சரியான புத்தகங்கள் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் எதிராக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.