குஜராத் பல்கலைக்கழகம் சுற்றுசூழலை காப்பதற்காக புதியதாக ஒரு முயற்சி எடுத்துள்ளது. மாணவர்கள் வகுப்பிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்களுக்கு தண்டனையாக, மரம் நட வேண்டும் என்று பேராசிரியர் மகேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, "கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுசூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. மாணவர்களுக்கு தண்டனையாக மரம் நட வேண்டும் என்று நான் தான் முடிவெடுத்து அதனை கல்லூரி தலைமையிடம் கூறி ஒப்புதல் பெற்று மாணவர்கள் மத்தியில் அறிவித்தேன். இனி எவரேனும் வகுப்பிற்கு தாமதமாக அல்லது தேர்வில் தோல்வியுற்றால் அவர்கள் மரம் நட வேண்டும். அது மட்டுமல்லாமல் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த மரம் வளர்ந்து அதனை பாதுகாப்பது அதை நட்டவருடைய கடமை என்றும் கூறியுள்ளார்.
இதை மாணவர்கள் தண்டனையாக பார்க்க வேண்டாம், மரம் நடுவது சுற்றுசூழலை மேம்படுத்துவதற்கு தான். மாணவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும், இந்த வயதிலே மரம் நடுவதை ஒரு பழக்கமாக மாணவர்கள் மத்தியில் கொண்டு வந்தால் அவர்கள் சுற்றுசூழலை பாதுகாப்பர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களோ, நானோ யார் தவறு செய்தாலும் வளாகத்திற்குள் மரம் நட வேண்டும். இது ஒரு புதிய முயற்சி, மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியை விட்டுச் செல்லும்போது அவர்கள் வளர்த்த மரம் கல்லூரியில் இருக்கும் என்ற மகிழ்ச்சியோடு இருப்பர். நாம் வளர்த்த மரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கே பலரும் கல்லூரிக்கு வருவர் என்று கூறினார்.