கடந்த வருடம் பணியிட மாற்றத்தில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்த ஆங்கில ஆசிரியர் பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல் திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாசப்போரட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது, அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரிம்குன்னம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமிர்தா. இவர் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுப்பதாக மாவட்ட கல்வி அலுவலருக்கு சில பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
புகாரை விசாரித்த மாவட்ட கல்வி அலுவலர் அமிர்தாவைப் பணி நீக்கம் செய்தார். இந்த செய்தி பள்ளியிலிருந்த அமிர்தாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி பள்ளி மாணவர்களிடமும் பரவியது.
அப்போது அமிர்தாவைச் சூழ்ந்த மாணவர்கள் அவர் பள்ளியைவிட்டுப் போகக்கூடாது என்று கதறி அழத்தொடங்கினர். மாணவர்களின் பாசத்தில் நெகிழ்ந்த அமிர்தாவும் அழுதார். இதனால், அங்கு ஒரு பாசப்போராட்டம் நடந்தது.
ஆனால், அங்கு வந்த மற்ற ஆசிரியர்களும், சில பெற்றோர்களும் அமிர்தாவை வலுக்கட்டாயமாகப் பள்ளியைவிட்டு வெளியேற்றினர். இருந்தும் பள்ளியின் வாசல் வரை அமிர்தா டீச்சரை அப்பள்ளி மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்
இதுகுறித்து அமிர்தா கூறுகையில், "என் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யான ஒன்று. என்னை பள்ளியைவிட்டு வெளியேற்றவேண்டும் என்ற நோக்கத்தில் சில ஆசிரியர்கள் திட்டமிட்டு இச்செயலைச் செய்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்!