Latest National News : மத்திய அரசால் மோட்டார் வாகன சட்டம் 1988இல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டு, அது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களைச் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாயாக இருந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாகவும், மொபைல் பேசிக்கொண்டு ஓட்டினால் 5,000 ரூபாய் வரையும் அபராதம் உயர்த்தப்பட்டது. இதேபோல அனைத்து அபராதத் தொகைகளும் உயர்த்தப்பட்டது.
அன்று முதல் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே ஆங்காங்கே கைகலப்பு நடைபெற்ற வண்ணமே இருந்தது. இந்நிலையில், அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து, டெல்லி வாகன ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஓலா, ஊபர் போன்ற தனியார் வாகன ஓட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வாகன ஓட்டிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால், டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசத்தின் தலைநகரமே பரபரப்பான நிலையில் உள்ளது.