கோவிட் -19 தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றுள் சாலையோர வியாபாரிகளும், சிறு வணிகர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உதவும் வகையில், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஆத்ம நிர்பார் நிதி (பி.எம்.எஸ்.வி.ஏ நிதி) திட்டம் ஜூன் 1ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதை விமர்சித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சாலையோர வியாபாரிகள், சிறு கடை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியது. இப்போது அவர்களது குடும்பங்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன.
சாலையோர வியாபாரிகள், சிறு கடை விற்பனையாளர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு உதவித் தொகுப்பு தேவை. மாறாக கடன் உதவி அல்ல" என கூறியுள்ளார்.