இந்தியா சுதந்திரம் அடைந்து 72 வருடங்கள் முடிந்துள்ளன. ஆனாலும், இன்றளவும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை தொடர்கதையாக நீடிக்கிறது. இந்த செயல் தீண்டாமையின் ஒரு வடிவம் என்றும், மனிதத் தன்மையற்ற செயல் என்றும் சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆணையமும் கடுமையாக எதிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இதுகுறித்து முற்போக்கு சிந்தனையாளர்களும் தங்களது குரல்களை எழுப்பி வருகின்றனர். அவ்வப்போது சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடுபவர்கள் மரணித்தும் போகின்றனர். நிவாரணம் என்ற பெயரில் அவர்களது கண்ணீரையும் சமூக குரலையும் அரசு தடுத்து விடுகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநில அரசு பொதுப்பணித்துறை சார்பில் ரோபோ மூலம் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியை ஒரு முன்னோட்ட பயிற்சியை மேற்கொண்டிருப்பது வரவேற்கும் வகையில் இருக்கிறது.
கேரளா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ கருவி 12 மீட்டர் ஆழமுள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் என கூறப்படுகிறது. எனவே இதனை பரிசோதனை முறையில் புதுச்சேரி மிஷின் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் செய்முறை விளக்கம் இன்று செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது, பொதுப்பணித்துறை சார்பில் செயற்பொறியாளர்கள் மற்றும் தனியார் ரோபோ எந்திரம் நிறுவனத்தினர், அலுவலர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர். தற்போது இந்த சம்பவம் புதுச்சேரி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விரைவில் அதிக ரோபோ கருவிகள் புதுச்சேரி மாநில அரசால் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.