கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களின் நிதிநிலையும் மோசமான நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், அவற்றிற்கு விரைவான உதவிகள் தேவை எனவும் முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம், தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களின் நிதிநிலை மோசமாகி வருவதால் அவற்றிற்கு உடனடி உதவிகள் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலங்களின் சுகாதாரக் கட்டமைப்புகள் அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கான மனிதவள கொள்கை நிறுவப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து நாட்டின் நிலமையைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்தார். பிற நாட்டு குடிமக்கள் பலரும் சிகிச்சை முடிந்து பத்திரமாய் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், உள்நாட்டு தொழிலாளர்கள் குறித்து அரசு அலட்சியமாய் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயிலை இயக்குங்கள் - மகாராஷ்டிரா