புதுச்சேரி மாநில 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முன்னதாக சட்டமன்றத்தில் காவல்துறை சார்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து அவையில் பேசிய அவர், ‘காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் தொழிற்கல்வி பயிலும் 5 ஆயிரத்து 389 மாணவர்களுக்கு 41 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்காலில் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி பெயரில் பட்டமேற்படிப்பு மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியில் தற்போது உள்ள துறைமுகத்தை 15.63 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.582 கோடி நிதி ஒதுக்கியுள்ளது’ என்றார். இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை காலை 9.30 மணி தொடங்கும் என்று கூறி அவையை ஒத்திவைத்தார்.