இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த 2009 உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து விசாரணை நடத்த 2015ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவதாக முன்னாள் அதிபரும், இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.
தீர்மானம் வாபஸ்
இந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வருகிற 26ஆம் தேதி (புதன்கிழமை) அறிவிக்கிறார்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் (HRC) 43ஆவது அமர்வில் குணவர்த்தன தனது உரையின் போது இதனை அறிவிக்கிறார். இந்த அமர்வுக்கு முன்னதாக வெளியுறவு செயலாளர் ரவினாதா ஆர்யசின்ஹா ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் தலைவர் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கரிடம் விலகல் முடிவு குறித்து நேற்று விளக்கினார்.
தமிழர்கள் படுகொலை
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானம் 2015ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. மே 2009இல் முடிவடைந்த இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் சில்வாவின் படைப்பிரிவு உரிமை மீறல்களைச் செய்ததாக ஐநா உரிமைகள் குழு தீர்மானம் குற்றம்சாட்டியது. அரசாங்க துருப்புகள் மற்றும் விடுதலைப் புலிகள் இருவரும் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.
எனினும் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளின் தலையீட்டால் இலங்கை போர்க்குற்றம் குறித்த தீர்மானம் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
விசாரணை
தற்போது தீர்மானத்தை திரும்பப் பெறுவதாக இலங்கை அறிவித்திருப்பதன் மூலம், இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போனவர்களின் நிலையும், போர்க்குற்றம் தொடர்பான விசாரணையும் என்னவாகும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, போரின் கடைசி மாதங்களில் மட்டும் சுமார் 45,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப் வருகையால் இந்தியா வல்லரசாகிவிடுமா? - உத்தவ் தாக்கரே கேள்வி