உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. கரோனாவிலிருந்து குணமடைய நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருள்களை மக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, பல நாட்டு மக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள பொருள்கள் மீது தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். உலகளவில் மசாலா பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, சீரகம், செலரி, பெருஞ்சீரகம், வெந்தயம், ஜாதிக்காய், எண்ணெய்கள், ஓலியோரெசின்கள், புதினா ஆகியவற்றை வியட்நாம், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதன்படி, ஜூன் மாதத்தில் மட்டும் 2,700 கோடி ரூபாய்க்கு மசாலா பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனை கடந்த ஆண்டு ஜூன் மாத ஏற்றுமதி (2,030 கோடி ரூபாய்) தொகையுடன் ஒப்பிடுகையில் 34 விழுக்காடு அதிகமாகும்.
இதுகுறித்து வேளாண் ஏற்றுமதி ஆய்வாளரும், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகருமான பரஷ்ராம் பாட்டீல் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக, மக்களின் உணவு முறை மாறிவிட்டது. நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள பொருள்கள் மீதுதான் இப்போது கவனம் செலுத்துகின்றனர். எனவே மசாலாப் பொருள்களுக்கான தேவைகள் சில மாதங்களாக அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கிறோம்.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக மசாலா பொருள்களுக்கான தேவை அதிகமாக இருந்ததாலும், அப்பொருள்களில் வலுவான மருத்துவத் தன்மை இருப்பதால்தான், தற்போது அதன் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், மஞ்சள் பல்வேறு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, நாட்டில் மசாலா பொருள்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக மசாலா பொருள்களை மேம்படுத்த ஆயுஷ் அமைச்சகம், மசாலா வாரியத்துடன் இணைந்து ஏராளமான பணிகளைச் செய்துவருகிறது" என்றார்.