ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசின் சார்பில் சிறுபான்மை விவகார மற்றும் வக்பு துறைக்காக கட்டப்பட்ட 8 கட்டடங்களை அவர் இன்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் இணைந்து போராட வேண்டியது அவசியம்.
இந்தியா பல்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த ஒரு அதிசய தேசம். அதன் உறுதியை வலுப்படுத்த மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான தேவைக்கேற்ப மாநில அரசு வளங்களை வழங்கி வருகிறது. சில பகுதிகளில், சிறுபான்மையினரிடையே கல்வி பற்றாக்குறை இருப்பதாக அறியமுடிகிறது. இந்த பகுதிகளில் கல்விக்கான வசதிகளை உருவாக்குவது மாநில அரசின் முன்னுரிமை.
சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் வக்ஃப் துறைக்காக கட்டப்பட்ட இந்த எட்டு கட்டடங்களும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான நோக்கத்தை அடைய உதவும்.
அந்த லட்சியப் பயணத்தில் இந்த கட்டுமான பணிகள் ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்த வசதிகள் விரிவாக்கப்படுவதால், சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கும்.
எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும் கல்வியின் மூலமே சாத்தியமாகும்.
சிறுபான்மையினரை மையநீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்கு அரும்பெரும் முயற்சிகள் தேவை" என அவர் வலியுறுத்தியுள்ளார்.